யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை கடலில் நீராடிய போது காணமால் போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன சிறுவன் இன்று செவ்வாய்க்கிழமை காலை செம்பியன்பற்றுப் பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த 15 வயதுடைய நந்தகுமார் திருமுருகன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மருதங்கேணி மாமுனை பகுதியிலுள்ள கடலில் நீராடிய சிறுவர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் உடனடியாகவே மீட்கப்பட்டு பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்றையவரான ந.திருமுருகனை அங்கிருந்த கடற்படையினரும், பொது மக்களும் சேர்ந்து தேடிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை செம்பியன்பற்று கடற்கரையில் கரையொதுங்கிய சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காணாமல் போன சிறுவனுடையது என அடையாளங் காணப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.