முறையிடச் சென்று திரும்பிய பணியாளர்களை அச்சுறுத்திய தலைவர்.
இலங்கை பனை அபிவிருத்தி சபையில் இடம்பெறும் ஊழல், மோசடிகளைக் கட்டுப்படுத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது இலங்கையர்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கட்டிக் காப்பாற்ற முன்வரவேண்டும் என்று இலங்கை பனை அபிவிருத்தி சபை பணியாளர் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள் சிலர் வடக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணம், பழைய பூங்காக்கு அருகில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு நேரில் சென்ற பனை அபிவிருத்திச் சபைப் பணியாளர்கள் தமது முறைப்பாட்டுக் கடிதத்தைக் கையளித்தனர்.
அந்தக் கடிதத்தில்,
நிர்வாக சீர்கேடு, ஊழல், செயற்திறனின்மை கொண்ட பனை அபிவிருத்தி சபை நிர்வாகம் தொடர்பான எமது ஆதங்கமும் முறைப்பாடும்.
ஊழலற்ற சுத்தமான இலங்கையைக் கட்டியெழுப்பும் திடசங்கற்பத்துடன் நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சகதி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இலங்கையர்களாக நாமும் அரசுடன் இணைந்திருக்கிறோம் அதேநேரம், உள்நாட்டு உற்பத்தியில் தனித்துவத்துடன் இயங்கும் பனை அபிவிருத்தி சபையின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட ஊழியர்களாக ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது நாம் தண்டிக்கப்பட்டு நிர்க்கதியாகியிருக்கிறோம். இந்நிலையில் எமக்கு நியாயம் வேண்டியும், இந்த சபையின் நிர்வாக உயர்மட்டத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பில் சில விடயங்களை தங்களின் மேலான நவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிராக போராட்டம் – பழிவாங்கல் இடமாற்றம்
புதிய அரசாங்கம் பதவியேற்றவுடன் பனை அபிவிருத்தி சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவது வழமையானது. அவ்வாறு புதிய அரசின் சார்பாக நியமிக்கப்பட்ட தலைவர் திரு விநாயகமூர்த்தி சகாதேவன் ஊழியர்களை அவமதிக்கும் விதமாக ஊடகங்களுக்கு 03.11.2024 அன்று கருத்துத் தெரிவித்திருந்தார். தலைவரின் கூற்றுக்கு எதிராக சபையின் ஊழியர்கள் தமது கடும் கண்டனங்களை பல்வேறு வழிகளில் தெரிவித்திருந்தனர். ஊழியர்களின் மனஉளைச்சலைத் தீர்த்துவைக்கும் வகையில், தலைவர், பொது முகாமையாளர் பங்குபற்றலுடன் கலந்துரையாடல் ஒன்றும் 05.11.2004 அன்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தற்காலிக பொது முகாமையாளர் திரு.சிறிவிஜேந்திரன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை ஊழியர்கள் முன்வைத்தார்கள். ஊழியர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்வாகத்தலைமை உரிய பதில் வழங்காமை காரணமாக நிர்வாகச் சீர்கேடு, ஊழலுக்கு எதிராக அமைதிவழிப் போராட்டம் ஒன்றும் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் 06.11.2024 அன்று நடத்தப்பட்டு வடமாகாண கௌரவ ஆளுநர் திரு நா. வேதநாயகம் அவர்களிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நிர்வாகத் தலைமைப் பீடம், ஊழியர்களை பழிவாங்கும் வகையில் எட்டுப் (08) பேருக்கு உடனடி இடமாற்ற உத்தரவை வழங்கியது.
அதிகாரிகளின் மிரட்டல்
நியாயமற்ற இடமாற்ற உத்தரவு குறித்து நாம் ஜனாதிபதிக்கு முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் ஒருவரின் ஊடாக சமர்ப்பித்திருந்தோம். எனினும் நாம் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அக்கடிதம் ஜனாதிபதியிடம் சேர்க்கப்படாமல், கௌரவ அமைச்சர் இரா.சந்திரசேகரம் அவர்களிடமிருந்து சபையின் தலைவரிடம் சேர்க்கப்பட்டிருப்பதாக எமக்கு அறியக்கிடைத்தது (கலைவரினால் இந்தத் தகவல் எமக்கு தெரிவிக்கப்பட்டது) மேலும், தம்மையும். அமைச்சரையும் மீறி எந்தச் செய்தியும் ஜனதிபதியைச் சென்றடையாது என்று விநாயகமூலத்தி சகாதேவன் அச்சுறுத்தல் விடுத்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பனை அபிவிருத்தி சபையில் இடம்பெற்ற தகுதியற்ற நியமனம், கொள்வனவில் நிதி மோசடி ஊழல், பண விரயம், துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், விசாரணையின் போது தேவையான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்குத் தயாராகவுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநரிடம் கடிதத்தைத் கையளித்து விட்டு பணியாளர்கள் அலுவலகத்துக்கு வந்த கையோடு, அங்கு வந்த தவைலர் தன்னுடைய அனுமதி இல்லாமல் பணியாளர்கள் யாரும் அலுவலகத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது என்று அச்சுறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.