இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான அமைச்சுக்கள், அலுவலகங்களின் இணையத்தளங்களை முடக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக இலங்கைப் பொலீஸ் திணைக்களத்தின் யூரியூப் தளம் மற்றும் அரசாங்க அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் ஆகியன முடங்கிப் போயுள்ளன என்று இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இரு இணைய சேவைகளும் சைபர் தாக்குதலாளிகளின் ஊடுருவலுக்கு இலக்காகி இருப்பதாகவும், காட்சிப்படுத்தப்படும் தகவல்கள் மாற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.