இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள் ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடல் அலரி மாளிகையில் இன்று காலை நடைபெற்றது. ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டதாகப் பிரதமரின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் இரு நாடுகளினதும் கூட்டு முயற்சிகளுக்கு ஜப்பானின் ஒத்துழைப்பை ஜப்பானியப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி மீண்டும் உறுதிப்படுத்தினார். கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய இணைப்பில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அதேநேரம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மூலம், ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரியா நன்றி தெரிவித்தார். இலங்கை அரசின் வெளிப்படைத்தன்மை, பொருளாதார சீர்திருத்தம் மற்றும் தேசிய மாற்றத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பங்களிப்பை, காலநிலை மாற்றம், மனிதாபிமான உதவி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை உள்ளடக்கியதாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையையும் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்த இரு தரப்பினரும் ஐந்து முக்கிய துறைகளில் இணைந்து செயற்படத் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
இந்தச் சந்திப்பின் போது இலங்கைக்கான ஜப்பான் தூதர் அக்கியோ இசோமாட்டா மற்றும் இரு அரசாங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.


