தேசிய ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வணிகமயப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி தலைமையில் தேசிய செயற்றிட்டம் நாளை ஆரம்பம்!

தேசிய ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கல் செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் நாளை புதன்கிழமை, பிற்பகல் 02.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஆய்வு நிறுவனங்களின் பணிப்பாளர்கள்,  தொழில்நுட்ப அமைச்சின் கீழான நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

உற்பத்தி சார்ந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதிலும் மக்களை மையப்படுத்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தி வரும் அரசாங்கம், உற்பத்தி அடிப்படையிலான பொருளாதார மாதிரியின் முக்கிய அம்சமாக ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உயர்நிலைத் தீர்வுகளுக்கான அவசரத் தேவையை உணர்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், மனித மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் பெறுமதி சேர் பொருட்கள் மற்றும் சேவைகளை வணிகமயமாக்குவதற்கு ஒரு பிரத்தியேக பொறிமுறை அவசியம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், ஆய்வு மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய செயற்றிட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொறிமுறையின் பங்காளர்களாக உள்ள அமைச்சுக்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், நிதியுதவி நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு தேசிய வளர்ச்சி முன்னுரிமைகளுடன் இணைந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்படவுள்ளது.

அறிவியல், தொழில், பொருளாதாரம், சட்டம், கலை மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவால் இந்த முயற்சி வழிநடத்தப்படும். இந்த முயற்சியை ஒருங்கிணைக்க ஜனாதிபதி செயலகத்தின் கீழ் பிரத்தியேக செயலகம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, முதற்கட்டமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் ஒத்துழைப்புடன். அதன் செயல்பாடுகளில் பொருத்தமான ஆய்வு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைக் கண்டறிந்து சரிபார்த்தல், அரசாங்க இடைவெளியை நிரப்பும் நிதியை ஒதுக்கீடு செய்தல், தனியார் முதலீட்டாளர்களை இணைத்தல் மற்றும் அறிவியல் அறிவைப் பரப்புவதற்கான திட்டங்களை செயல்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!