கலாவதியான மற்றும் பழுதடைந்த பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொதுச் சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளின் முகாமையாளர்களுக்குத் தண்டம் விதித்துத் தீர்பளிக்கப்பட்டுள்ளது.
கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தனுக்கு கோண்டாவில் பகுதிகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வண்டுமொய்த்த, காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக்க் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தனின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், க. ஜெகானந்தன் தலைமையிலான குழுவினரால் பல்பொருள் அங்காடிகள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது திகதி காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்த பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரு பல்பொருள் அங்காடிகள் இனங்காணப்பட்டன.
குறித்த பொருட்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர் க. ஜெகானந்தன், பல்பொருள் அங்காடி முகாமையாளர்களுக்கு எதிராக நேற்று வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கினை அன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் முகாமையாளர்களுக்கு 60,000/=, 30,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்ததுடன் கடுமையான எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டது.


