பருத்தித்துறையில் கடற்றொழிலாளர் போராட்டம் : பருத்தித்துறை வீதி முடக்கம்!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

சுருக்கு வலை உட்பட்ட சட்ட விரோத கடற்றொழிலைத் தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்களால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலக ஊழியர்கள் எவரும் கடமைக்கு உள்ளே செல்ல முடியாதவாறு பிரதேச செயலக வாயில்கள் மறிக்கப்பட்டு போராட்டகாரர்கள் அமர்ந்துள்ளனர். பிரதேச செயலர் மற்றும் பருத்தித்துறை பொலீசார் போராட்டகாரர்களை சமரசம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

“மீனவர்களை வாழ விடு அல்லது சாகவிடு”,”மீனவர்களின் வயிற்றில் அடிக்கும் சுருக்கு வலையை உடனடியாக நிறுத்து”, “தடை செய்யப்பட்ட அனைத்து தொழிலையும் உடனடியாக நிறுத்து” எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கோசங்கள் எழுப்பப்படுகின்றன. போராட்டம் இடம்பெறும் பகுதியில் பொலீஸார் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பருத்தித்துறை வீதிக்குக் குறுக்காக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதனால், பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அவ் வீதி வழியாக வந்த நீதவான் கூட தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமக்கான நீதி கிடைக்கும் வரை அவ்விடத்தை விட்டு அகலப் போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!