திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள புல்மோட்டை, பொன்மலைக்குடா பகுதியிலுள்ள பொன்மலை என்ற மலைப் பகுதியிலும், அந்த மலையை அண்டிய முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளையும் உள்ளடக்கி புத்தர் சிலைகள் நிறுவி விகாரை அமைக்கும் பிக்குகளின் நடடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து தேரர்களுடன் வருகைதந்த குழுவினர் போராட்டம் மேற்கொண்ட மக்களை கைத்துப்பாக்கியைக் கொண்டு மிரட்டியுள்ளனர்.
நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
புல்மோட்டையில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் – தொழில் செய்துவரும் பகுதிகளான தேத்தாவாடி தீவு, பொன்மலைக்குடா, அரிசி மலை, ஷபா நகர் ஆகிய கிராமங்களுக்கு நடுவே பொன்மலைக்குடா உள்ளது. பொன்மலைப் பகுதியில் முஸ்லிம் மற்றும் தமிழ் மீனவர்களின் வாடிகள் உள்ளன.
இந்தப் பகுதியிலேயே புத்தர் சிலை அமைத்து காணிகளைக் கையகப்படுத்தும் முயற்சிக்காக புல்மோட்டை அரிசிமலை பிக்குவான பனாமுரே திலகவங்ச மற்றும் இராணுவத்தினர், தொல்லியல் துறையினர் அடங்கிய குழுவினர் கடந்த 30 ஆம் திகதி அங்கு வருகை தந்துள்ளனர். அந்த முயற்சிக்கு மக்கள் அன்றைய தினமே எதிர்ப்பை வெளிப்படுத்தியதை அடுத்து நேற்றுமுன்தினம் பிக்கு மற்றும் அவரது சகாக்கள், இராணுவத்தினர் இணைத்து ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்காக வந்துள்ளனர். மக்கள் மீண்டும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திப் போராட்டம் மேற்கொண்டனர்.
பிக்குவின் சகோதரரான அவரது சாரதி சம்பத் என்பவர் புல்மோட்டை பகுதி விவசாயி ஒருவரின் காணி வேலியை அத்துமீறி வெட்டி வாகனங்களை உள்ளே கொண்டு சென்றிருந்தார். இதனால் காணி உரிமையாளருடன் முரண்பாட்டு நிலை ஏற்பட அப்பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் ஆக்கிரமிப்பு முயற்சிக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்போது பனாமுரே திலகவங்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என அறியப்படும் இரண்டுபேர் அவர்களது கைத்துப்பாக்கிகளை எடுத்து மக்களை நோக்கி சுட முயற்சி செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
30 பேருக்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு சிலை வைக்க வந்ததோடு அவர்களோடு 15 பேருக்கு மேற்பட்ட இராணுவத்தினர், சிவில் பாதுகாப்பு படையினர், பொலிஸார் மற்றும் தொல்லியல் துறையினருடன் பல தேரர்களும் வருகை தந்துள்ளனர்.
இப்பகுதியிலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் காணிக்குள் பயிர் செய்தால் பிக்குவின் ஆதரவாளர்கள் பயிர்ச் செய்கைகளை இரவோடு இரவாக அழித்து வருவதோடு, படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு தரப்பினரை வைத்து தம்மை மிரட்டி அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் தொடர்சியாக ஈடுபட்டுவருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பனாமுரே திலகவங்ச என்ற பிக்கு தொடர்ச்சியாக கிழக்கு மாகாணத்தின் பகுதிகளில் குறிப்பாக திருகோணமலையில் தமிழ்ப் பகுதிகளை இலக்குவைத்து இராணுவம் மற்றும் தொல்லியல் துறையின் ஆதரவோடு விகாரைகளைப் புதிதாக அமைத்து வருவதாகவும் பல ஆயிரக்கணக்கான காணிகளை பௌத்த பூமி என அடையாளப்படுத்திவருவதாகவும் அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.