தற்போதைய நிலைமையில் ஓரிரு மாதங்களுக்கு விலைவாசி, விலை உயர்வு தவிர்க்க முடியாதது. எல்லாவற்றுக்கும் சர்வதேசத்திடம் நாம் கையேந்தி நிற்க முடியாது. நாம் மெல்ல மெல்ல சொந்தக் காலில் நிற்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று நடாத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது பதிலில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது என்ன? அன்று வரியை நீக்கியமையால் தான் நாடு வங்குரோத்து அடைந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில்தான் இன்று மீண்டும் வரியை விதித்துள்ளோம்.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தொழிற்சங்கங்கள் உள்ளன. ஆனால், எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சில தொழிற்சங்கங்கள் பலிக்கடாவாகியுள்ளன. வங்குரோத்து நிலையை அடைந்துள்ள எமது நாடு மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகின்ற நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை எதற்கு என்று குறித்த தொழிற்சங்கங்களிடம் கேட்க விரும்புகின்றேன். ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது தான் என்ன?
அன்று வரியை நீக்கியமையால்தான் நாடு வங்குரோத்து அடைந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தான் இன்று மீண்டும் வரியை விதித்துள்ளோம். மின் கட்டணத்தில் அதிகரிப்பை மேற்கொள்ளாமல் மின் விநியோகத்தைச் சீராக மேற்கொள்ள முடியாது. தற்போதைய நிலைமையில் ஓரிரு மாதங்களுக்கு விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது. எல்லாவற்றுக்கும் சர்வதேசத்திடம் நாம் கையேந்தி நிற்க முடியாது. நாம் மெல்ல மெல்ல சொந்தக் காலில் நிற்கப் பழகிக்கொள்ள வேண்டும்” என்றார்.
