அரசுக்கு எதிரான அடையாள வேலை நிறுத்தம் ஆரம்பம் : 40க்கும் மேற்பட்ட அத்தியாவசிய சேவைத் தொழிற்சங்கங்கள் களத்தில்!

அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையை நீக்குதல் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் நாளை 2 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி வரை சுகாதாரம் , பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், நீர்வழங்கல் , கல்வி மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் கறுப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்திய தொழிற்சங்கங்கள் அன்றைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்திருந்தன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவடைந்தது.

அதனையடுத்துத் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்கள் , இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்திருந்தன. தமது வேலை நிறுத்த போராட்டத்தை முடக்குவதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அத்தியாவசிய சேவைகளைப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் , எனினும் தாம் அதனைக் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அவை அறிவித்துள்ளன.

எவ்வாறிருப்பினும் மருத்துவ சேவைகள் அத்தியாவசியமானவை என்பதால் பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாதிருப்பதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதே வேளை , தமது பணிகளை தடையின்றி முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், இன்றைய வேலைநிறுத்த போராட்டத்தின் பின்னரும் தீர்வு வழங்கப்படாவிட்டால் சேவைகளை நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதற்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். அதற்கமைய இன்று கல்வி சேவை நிறுவனங்கள் , வைத்தியசாலைகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவற்றில் கறுப்புக் கொடியேந்தி எதிர்ப்பை வெளியிடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!