வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு பளையில் திறந்து வைப்பு!

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் கீழ், வடக்கின் முதலாவது தெங்கு விதை உற்பத்தி அலகு பளையில் இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த திட்டம் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுத் திட்டமாகச் செயற்படுத்தப்படுகின்றது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி வடக்கு தெங்கு முக்கோண வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், 2025 ஆம் ஆண்டுக்குள் வட மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் தென்னை மரங்களைப் பயிரிட எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2027 வரையிலான 03 ஆண்டுகளில் 40 ஆயிரம் ஏக்கராக அதை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்வாக ஜனாதிபதி தென்னம்பிள்ளை ஒன்றை நடுகை செய்ததோடு, தெங்கு விதை உற்பத்தி அலகையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாகவுள்ள பகுதியில் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையால் நடத்தப்படும் தெங்கு தொடர்பான கண்காட்சியையும் ஜனாதிபதி இதன்போது பார்வையிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!