பல்கலைக்கழகங்களில் பகிடி வதையை இல்லாமல் செய்வதற்குக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் அவசர கூட்டமொன்று நாளை 05 ஆம் திகதி திங்கட்கிழமை நிகழ்நிலையில் நடைபெறவுள்ளது.
நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை இல்லாதொழிப்பது பற்றியும், பகிடிவதைக்கெதிராக நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளை மேலும் இறுக்கமாக நடைமுறைப்படுத்துவது பற்றியும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் கபில செனிவரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் பீடாதிபதிகள், வளாக முதல்வர்கள், சட்ட நிறைவேற்று அலுவலர்கள், மாணவ ஆலோசகர்கள் மற்றும் விடுதிக்காப்பாளர்களுடன் துணைவேந்தர்களைக் கலந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் அறிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் உட்படக் கல்வி நிலையங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் வன்முறைகளைத் தடைசெய்வதற்காக 1998 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க “பகிடி வதையையும், வேறுவகையான வன்செயல்களையும் தடைசெய்தல் சட்டம்”, 2015 ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க “குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும், சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம்” மற்றும் 2017 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க “குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும், சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு (திருத்த)ச் சட்டம்” ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்தினால் இயற்றப்பட்டு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றைவிடப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 24 மணிநேர அவசர முறைப்பாட்டுப் பொறிமுறையையும் செயற்படுத்தி வருவதோடு, கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.
எனினும், அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட இரண்டாம் வருட மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மனழுத்தத்தினால் சுய உயிர்மாய்ப்புச் செய்திருந்தார். இந்தச் சம்பவத்தையடுத்தே கல்வி அமைச்சின் செயலாளரினால் நாளைய கூட்டத்துக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணையை நடத்துவதற்காக விசாணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரினால் இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் இதற்கு மேலதிகமாக உளநல சுகாதாரப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாகவும் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படுவதால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன வலியுறுத்தியுள்ளார்.
