நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஈ. எம். எஸ். பீ. ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அஞ்சல் சேவையானது பொதுமக்கள் வாழ்வைக் கொண்டு நடத்துவதற்கு இன்றியமையாததென மற்றும் சொல்லப்பட்ட சேவைக்கு இடையூறாகக் கூடுமென்பதை அல்லது தடையாகக் கூடுமென்பதைக் கருத்திற் கொண்டு அத்தியாவசிய சேவை எனப் பிரகடனப்படுத்தப்படுவதாக இன்று வெளியிடப்பட்டுள்ள அதி சிறப்பு வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.