“எமது நிலம் – எமக்கு வேண்டும்” தையிட்டி விகாரை நிலத்தைக் கோரி உரிமையாளர்கள் செவ்வாய் முதல் போராட்டம் : பேதமின்றி ஆதரவு தரக் கோரிக்கை!

“யாழ்ப்பாணம் – வலி. வடக்கு தையிட்டிப் பகுதியில் சண்ட விரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிக்குப் பதிலாக மாற்றுக்காணியை ஏற்றுக்கொள்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை – பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது” என்று கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றுச் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் காணி உரிமையாளர்களான ஜெயகுமார், பாஸ்கரன், சுகுமாரி, சாருஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின் போது அவர்கள் தெரிவித் ததாவது:

“மக்களது காணி நிலங்கள் மக்களுக்கே சொந்தம். அவை மக்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர அண்மையில் யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறிய கருத்துக்கு முரணாக தையிட்டி விவகாரம் இருக்கின்றது.

அகில இலங்கை பௌத்த மகாசபை ஒருபடி மேல் சென்று விகாரை கட்டப்பட்ட காணி நிலம் மட்டுமல்ல, அயலில் உள்ள காணி நிலங்களும் சுவீகரிக்கப்படும் என இறுமாப்புடன் கூறியுள்ளது.

அதேநேரம் தேர்தல் கலங்களில் தேசிய மக்கள் சக்தியின் இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மூவரும் எம்முடன் இவ்விடயம் தொடர்பில் பேசி, கடந்த கால யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்றல்லாது; கடந்த அரசுகள் போலல்லாது தாம் ஆட்சிக்கு வந்ததும் இவ்விடயம் தீர்க்கப்படும் என எமக்கு வாக்குறுதியும் வழங்கியிருந்தனர். ஆனால் இன்று இம் மூவரும் பொம்மைகள் போன்று வாய்பேசாது மௌனமாக உள்ளனர். நாம் எமது பூர்வீக நிலங்களையே கேட்கின்றோம்.

ஆளுநர் கூட எம்முடன் பேசிய விடயத்தை வேறு திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்து தவறான அர்த்தத்துடன் ஜனாதிபதிக்குக் கூறியிருந்தார். ஆனாலும் அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எமது பிரச்சினையை எடுத்திருந்தாலும் அவருக்கு பலமாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை கொடுத்திருக்கவில்லை. இது வாக்களித்த எமக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது” என்றனர்.

மேலும், தையிட்டி விகாரை முன்பாக எதிர்வரும் 11 ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து மறுநாள் மாலை 6 மணி வரை எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நாம் முன்னெடுக்கவுள்ளோம். காணி உரிமையாளர்களாகிய எமது போராட்டத்துக்குப் பாரபட்சமற்ற வகையில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், போக்குவரத்து மற்றும் சிற்றூர்தி, முச்சக்கர வண்டிச் சங்கம் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஆதரவை வழங்கி வலுச்சேர்க்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளனர். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!