பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்ற இணையத்தளத்தில் சபாநாயகரின் பெயருக்கு முன்னால் “கலாநிதி” எனக்குறிப்பிடப்பட்டிருந்தமை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்தே தான் தனது பதவியைத் துறப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் குறிப்பொன்றை வெளியிட்டுள்ள அவர், தான் பொய்யான கூற்றுக்கள் எதனையும் முன்வைக்கவில்லையென்றாலும், சில ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தற்போது தனது கல்விப் பதிவேடுகளை உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
“நான் கலாநிதி பட்டத்தைப் பெற்ற ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்பதால் தான் பதவி விலகுவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது கல்வித் தகைமை தொடர்பாக சபாநாயகர் உரிய முறையில் விளக்கமளிக்கத் தவறினால், அவர் தானாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், எதிர்வரும் 17 நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிப்பதற்கான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் கையொப்பம் சேகரிக்கத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.