நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் பங்கு பற்றப் போவதில்லை என்ற தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதனால் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆரம்பிப்பதில் இலங்கை பரீட்சைத் திணைக்களம் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக்கொள்கை மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி, பல்கலைக் கழகங்களில் தொடர்ச்சியாகக் கூட்டங்களைப் புறக்கணித்து வரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், தமது எதிர்காலத் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து நேற்று ஞாயிற்றுக் கிழமை கூடி ஆராய்ந்தது. இந்தக் கூட்டத்தின் போதே கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் பங்கு பற்றப் போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக்கொள்கை மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நியாயமான பதில் கிடைக்கும் வரை தொடர்ந்தும் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் கூட்டங்களைப் புறக்கணிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனச் செயலாளர் றொகான் லக்சிறி தெரிவித்தார்.