சட்டத்தை மதிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார். இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள அசாதாரண சூழல் மற்றும் எரிபொருள் நெருக்கடியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சட்டவிரோதச் செயல்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் யுத்தம் போன்ற இக்கட்டான சூழ்நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 10 இற்கும் மேற்பட்ட நாடுகள் இலங்கைப் பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.
உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரசுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் வேளையில், பொலிஸாரின் வகிபாகத்தை எவரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். எரிபொருளைச் சட்டவிரோதமாகச் சேமித்து வைத்திருந்த நபர்கள் மற்றும் அதற்குத் துணை நின்றவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெறியற்ற முறையில் மற்றும் சமூக விரோதப் போக்குடன் செயற்படும் நபர்களுக்கு எதிராகப் பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குற்றச் செயல்கள் அல்லது வன்முறைகள் தொடர்பான தகவல்கள் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.
