நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலையினால் சிறுவர்களிடையே தோல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் உடலில் நீர்ச்சத்து இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக வெப்பநிலை காரணமாக தோல் வெடிப்புகள், எரிச்சல், பூஞ்சை தொற்று போன்ற பொதுவான தோல் நோய்கள் ஏற்படக்கூடும். மென்மையான சருமம் கொண்ட சிறுவர்கள் மற்றும் வெளிப்புறச் சூழலில் அதிக நேரம் செலவிடும் சிறுவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகமாக ஆளாகக்கூடும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிக வெப்பநிலையினால் சிறுவர்களில் நீர்ச்சத்து இழப்பு அபாயம் அதிகரிப்பதுடன், தூக்கமின்மை, சோர்வு மற்றும் பசியின்மை போன்ற உடல்நலப் பிரச்னைகளும் உருவாகக்கூடும். முறையான மேற்பார்வையின் கீழ் நீரில் விளையாடுவதன் மூலம் சிறுவர்களுக்கு குளிர்ச்சியளிக்க முடியும் எனவும், இது வெப்பமான வானிலையில் உடல் வெப்பத்தை குறைக்க உதவும் எனவும் சுகாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், பல பாடசாலைகளில் ஆண்டு தோறும் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளினால் வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடும்போது வெப்பச் சோர்வு மற்றும் வெப்பப் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சிறுவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யவேண்டும். அத்தோடு, விளையாட்டு நடவடிக்கைகளின்போது இடைவேளைகளை எடுக்கவும், அதிக வெப்பநிலையில் நீண்ட நேரம் வெளியில் இருப்பதை தவிர்க்கவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
