வலி. தெற்கு பிரதேச சபையில் அமரர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு!

முன்னைநாள் உடுவில் கிராம சபைத் தலைவரும், 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரர் வி. தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழா நாளை, 23 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9:30 மணிக்கு சுன்னாகத்தில் அமைந்துள்ள வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பங்கு பற்றுதலுடன் நடைபெறவுள்ள இந்த நிழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறீசற்குணராசா பிரதம விருந்தினராக க் கலந்து கொண்டு திரு உருவச் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றவுள்ளார்.

அமரர் வி. தர்மலிங்கம் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்து 1944 ஆம் ஆண்டு உடுவில் கிராம சபை உறுப்பினராகவும், பின்பு அதன் தலைவராகவும் பதவி வகித்தார்.

1952ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி முதன் முதலாக தேர்தலில் போட்டியிட்ட போது அதன் தலைவர் தந்தை செல்வா காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்ட சமயத்தில், அவரை ஆதரித்து மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

1960 மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டினார். உடுவில் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். மீண்டும் 1960 ஜூலை, 1965 மார்ச், 1970 மே நடந்த தேர்தல்களில் மீண்டும் தெரிவானார்.

1972 ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தோற்றுவித்த போது, தர்மலிங்கம் மானிப்பாய் – உடுவில் தொகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் 1977 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பிருமான தர்மலிங்கம் சித்தார்த்தனின் தந்தையார் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!