இலங்கை கால்பந்து சம்மேளனம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக கால்பந்தாட்ட போட்டிகளை ஒழுங்குபடுத்துவதற்கும், விளையாட்டை நிர்வகிப்பதற்குமான கட்டுப்பாட்டு அமைப்பாக விளங்கும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) இலங்கையில் தேசிய ரீதியா கால்பந்தாட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை கால்பந்து சம்மேளன (FFSL) த்தை நேற்று – ஜனவரி 21 முதல் மறு அறிவித்தல் வரை தடைசெய்துள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் சுயாதீனத்துக்குச் சவால் விடுக்கும் வகையில் மூன்றாம் தரப்பின் தலையீடுகள் காணப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் காரணமாக – தடை நீக்கப்படும் வரை இலங்கையிலிருந்து எந்தவொரு கால்பந்தாட்ட அணியும் சர்வதேச ரீதியான போட்டிகளில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ ரங்கா தெரிவு செய்யப்பட்மைக்கு எதிராக – அத் தெரிவை இடைநிறுத்தக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நபரொருவர் தாக்கல் செய்துள்ள வழக்கில், இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் பதவித் தேர்தலின் போது விளையாட்டுத் துறை அமைச்சர் தன்னை முறையற்ற விதத்தில் போட்டியிட முடியாமல் நிராகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.