இந்தியா தமிழ் மக்களை நேசிக்கின்றது. இந்தியா வெளிவிவகார அமைச்சர் மக்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவே அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். இந்தக் காலகட்டங்களை நாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது வறட்டுச் சித்தாந்தம் கதைக்கும் நேரம் இல்லை என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராசா தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி. தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு வலிகாமம் தெற்கு பிரதேச சபை முன்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
எங்களுடைய வாழ்க்கைக்கக நாங்கள் எப்போதும் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்போம். சந்தேகத்தால் பிரளயத்தை உண்டாக்கிக் கொண்டே இருக்கிறோம். இன்று இந்தியா எங்களை நேசிக்கிறது. ஆனாலும் அதில் கூட சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள். துணைவேந்தர் சீனாவிடம் காசு வேண்டப் போகிறார் என்கிறார்கள்.
அமெரிக்கா , சீனா , இந்தியா வல்லரசு நாடுகளாகும். எங்களுடைய பூர்வீகத்தொடர்பு இந்தியாவுடன் தான் இருக்கிறது. இந்தியா வெளிவிவகார அமைச்சர் அடிக்கடி இலங்கைக்கு வந்து போகிறார். அவர் தனக்கு வேலையில்லாமல் இங்கு வந்து போகவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே எல்லைப் பிரச்சினைகள் நிறைய இருக்கிறது. கஷ்மீரில் இருக்கிறது, அசாமில் இருக்கிறது. பாகிஸ்தானுடன் – சீனாவுடன் எல்லாம் பிரச்சினை இருக்கிறது. அப்படியிருந்தும் அவர் இங்கு வந்து போகிறார். இந்தக் காலகட்டங்களை நாம் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது வறட்டுச் சித்தாந்தம் கதைக்கும் நேரம் இல்லை. எனவே வந்து போன இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கரை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் தானே வாக்களிக்கப் போகிறார்கள்? மக்களில் ஒருவரைத்தானே தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? இதில் பதற்றப்பட என்ன இருக்கிறது? உள்ளூராட்சித் தேர்தலில் சிறந்த முறையில் பங்கு பற்றி, சிறந்த பிரதேச சபைகளை உருவாக்க வேண்டும். முதலில் உள்ளூராட்சி சபைகளைச் சிறந்ததாக உருவாக்க வேண்டும். அதன் பிறகு வடக்கு – கிழக்கை பார்த்துக் கொள்ளலாம்.
வரவிருப்பது உள்ளூராட்சித் தேர்தல். உங்களுக்குத் தெரியும் உள்ளூரில் யார் சிறந்தவர் என்று, உள்ளூரில் தகுதியானவருக்குப் பொறுப்புடன் வாக்களித்து உள்ளூராட்சி சபைகளைச் சிறப்பாக அமைத்து, நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இது, பொறுப்புடன் செயற்பட வேண்டிய காலம்.
தமிழ்க் கட்சிகள் இப்போது மூன்று கட்சிகளாகி வந்திருக்கிறார்கள். திரிசூலம் என்று சொல்லலாம். முன்னர் காங்கிரஸ், தமிழரசு என்றார்கள். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி என்றார்கள். இப்பொழுது உதய சூரியன் எங்கேயோ நிற்கிறது. ரீ.என்.ஏ பிறகு டீ. ரீ.என். ஏ எனபதும் வீடு – சைக்கிள் – குத்துவிளக்கு என்று திரிசூலமாக நிற்கிறார்கள். சிவன் வைத்திருக்கும் திரிசூலமாக காணப்படும் தமிழ் கட்சிகள் எம் மக்களுக்கு சமாதானத்தை கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் போராசிரியர் சி.சிறிசற்குணராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்துவைத்தார்.
இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபையின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருனர்.