யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பதில் பொலீஸ்மா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளதாகச் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு தன்னிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவரது கோரிக்கை தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு தான் பதில் பொலீஸ்மா அதிபருக்குப் பரிந்துரை செய்துள்ளதாகவும் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த சபாநாயகர், இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலீஸ்மா அதிபர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு தன்னுடைய அவதானங்களைக் குறிப்பிட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக விடயத்தை நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழுவிடம் பாரப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளதாகவும் சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பில் சக நாடாளுமனற்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான ஹேமாலி வீரசேகர தலைமையில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்தச் சிறப்புக் குழுவே, விடயத்தை மேலதிக நடவடிக்கைகளுக்காக நாடாளுமன்றச் சிறப்புரிமைகள் குழுவிடம் பாரப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ளதாகச் சபாநாயகர் குறிப்பிட்டார்.