உள்ளூராட்சித் தேர்தல் 2023 – திட்டமிட்டபடி தேர்தலை நடாத்த மேலும் 100 மில்லியன் நிதி விடுவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு மேலும் 100 மில்லியன் ரூபாவைத் திறைசேரி விடுவித்துள்ளது. இந்நிதி கிடைத்ததைத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

திட்டமிட்டபடி எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள போதிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் தங்களுக்கு சட்டத் தடைகள் எதுவும் இல்லை. எனவே, அறிவிக்கப்பட்டபடி மார்ச் 9ஆம் திகதி தேர்தலை நடத்துவதை உறுதி செய்ய ஆணைக்குழுவும் ஏனைய அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களும் தத்தமது பணியிடங்களில் தபால் வாக்குகளை மூன்று நாள்களில் அளிக்கலாம் என்றும், அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் வாக்கு போட முடியாமல் போனால், இம்மாதம் 28ம் திகதி, அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்கள் முன்னிலையில் தமது வாக்குகளைப் பதிவு செய்யலாம் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்ததுடன், சுமார் 36,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதேநேரம், தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிக்காக கடந்த வாரம் அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு  சுமார் 40 மில்லியன் ரூபா திறைசேரியினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!