இந்திய அரசின் நிதியுதவியுடன் யாழ்ப்பாண மக்களுக்காக அமைக்கப்பட்ட ‘யாழ்ப்பாண கலாசார நிலையம்’ நேற்றுக்காலை 10.03க்கு, கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்டு யாழ்ப்பாண மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. கல்வெட்டு திரை நீக்கம் செய்யப்பட்ட நேரம் இராகு காலம் என்பது அங்கு கலந்து கொண்ட பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
பொதுவாகத் தமிழர்கள் சுப நேரங்கள் பார்த்தே திறப்பு விழாக்கள் உள்ளிட்ட மங்கல நிகழ்வுகள் முன்னெடுப்பது வழமை. நேற்றைய நாள் காலை 9.34 தொடக்கம் 11.04 வரையில் இராகு காலமாகும். அந்த நேரத்தில் மங்கல காரியங்கள் எதனையும் முன்னெடுப்பதில்லை, நேற்று அவ்வாறான இராகு காலத்தில் இந்தக் கலாசார மண்டபம் திறந்து வைக்கப்பட்டமையே பலரையும் சங்கடத்துக்கு உள்ளாக்கியது.
நிகழ்வை ஒழுங்கு செய்த புத்த சாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சைச் சேர்ந்தவர்கள் இராகு காலம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனினும், யாழ்ப்பாணத்தில் நிகழ்வு ஏற்பாடுகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட செயலக அதிகாரிகளும், இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளும் இதனைக் கவனிக்காமல் விட்டமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். மாநகரசபைக்குச் சொந்தமான நிலத்தில் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் யாழ்ப்பாண கலாசார நிலையத்துக்கான அடிக்கல், இந்தியப் பிரதமர் மோடியால் நடப்பட்டது. கலாசார நிலையம் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் காலத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கொழும்பில் நிற்கும் சமயத்தில், கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் கலாசார நிலையத்தில் இந்திய சுதந்திரநாள் நிகழ்வு மற்றும் குடியரசுநாள் நிகழ்வு என்பன இடம்பெற்று வந்தன. இந்த கலாசார நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உத்தியோகபூர்வமாக உரித்தாக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால்பாக்லே, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், இந்திய இணை அமைச்சர் எல்.வேல்முருகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், இ.அங்கஜன், காதர் மஸ்தான், யாழ். மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலாசார நிகழ்வுகள் பல நடைபெற்றன. வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஜனாதிபதி ரணில், இந்திய இணை அமைச்சர் ஆகியோரின் உரைகளும் நடைபெற்றன.