தமிழ் இளைஞர்களின் மீள் எழுச்சிக்குத் தூண்டுகிறாரா லலீசன்? பட்டிமன்ற நடுவருக்கு வந்த சோதனை!

கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி எஸ். லலீசன் இலங்கையில் இன நல்லிணக்கத்துக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டுகிறாரா என்ற கோணத்தில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தமிழி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “தமிழ் வேள்வி 2023” நிகழ்வில் “ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் தற்பொழுது இளைஞர் அமைப்புக்களின் எழுச்சி அவசியமானதா ? அவசியமற்றதா ?” என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்து கொண்ட செந்தமிழ்ச்சொல்லருவி திரு.ச.லலீசன், இளைஞர்களிடையே இன நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையில் – தமிழ் இளைஞர்களை எழுச்சி கொள்ளத் தூண்டும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் என்று கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறியவருகிறது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 10 ஆம் திகதி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்சி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு விளக்கமான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் கல்வி அமைச்சின் ஒழுக்காற்றுப் பிரிவுக்கான மேலதிக செயலாளர் சீ. சமந்தி வீரசிங்கவினால் கல்வி அமைச்சின் ஆசிரியர் பயிற்சிக் கல்விப் பிரிவின் பணிப்பாளரிடம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடமும் கல்வி அமைச்சினால் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்களில் இருந்து மேலும் அறியக் கிடைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!