போரில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவு கூருவதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனால் புலிகள் இயக்கத்தின் கொடிகள், இலச்சினை, சின்னங்கள் மற்றும் சீருடைகளைப் பயன்படுத்த முடியாது என பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வட பகுதி மக்களுக்குத் தடை எதுவும் இல்லை. அதனை அரசாங்கம் தடுக்கவும் இல்லை. ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். நவம்பர் 27ஆம் திகதி அனுசரிக்கப்படும் மாவீரர் நாளை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் சின்னங்கள், சீருடைகள் அல்லது படங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதி இல்லை.
எது எப்படியாயினும், இலங்கையின் சட்டம் ஒழுங்கை மீறாத வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதை யாரும் தடைசெய்யவில்லை. ஆனால் நினைவேந்தல்களுக்கு பல்வேறு வியாக்கியானங்களை வழங்க சில குழுக்கள் அடிக்கடி முயற்சிக்கின்றன” என்று குறிப்பிட்டார்.
மேலும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்களைப் பாவித்து நிகழ்வு நடத்துவதைத் தவிர்க்குமாறு பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.