யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கும், தமிழகத்தின் சென்னை துறைமுகத்திலிருந்தான அல்லது புதுச்சேரியின் காரைக்கால் துறைமுகத்திலிருந்தான சரக்குக் கப்பல்சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இன்னமும் இறுதிமுடிவு எடுக்கப்படாத நிலைமை நீடிக்கின்றது.
காரைக்காலுக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல்சேவை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பயணிகள் சேவையை முன்னெடுக்கும் கப்பல் நிறுவனம் இந்தியாவிலிருந்தே செயற்படவுள்ளது. இதேவேளை, சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறைத் துறைமுகத்துக்கு தற்போதைய நிலைமையில் 350 மெற்றிக்தொன் எடையுள்ள பொருள்களை ஏற்றிய கப்பல்களையே கொண்டு வரமுடியும். சென்னை போன்ற துறைமுகங்களிருந்து பொருள்களைக் கொண்டு வரும் போது செலவு குறைவாகவும், காரைக்காலிருந்து கொண்டு வரும்போது செலவு அதிகமாகவும் இருக்கும் இதனால், சென்னையிலிருந்து கப்பல்சேவை நடத்துவதையே வடக்கு வர்த்தகர்கள் விரும்புகின்றனர். இது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் சரக்குக் கப்பல்சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நீடிக்கின்றது.