இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கல்லேல்லே சுமனசிறி நியமிக்கப்பட்டு பத்து நாள்களில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் தனது நிலைப்பாட்டை விளக்கி ஜனாதிபதியின் செயலாளருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில், தனக்கு வழங்கப்பட்டுள்ள வேந்தர் பதவி சங்கத்துக்குள் பிரிவினை ஏற்படுத்துவதாக அல்லது சங்கத்தின் ஒற்றுமைக்குப் பங்கமேற்படுத்துவதாக அமையுமானால் அத்தகையதொரு பதவியில் தான் தொடர்வது பொருத்தமற்றது என்றும், பதவி வகிப்பதைக் காட்டிலும் சங்கத்தினரிடையேயான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதே முக்கியமானதெனத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பிலும், ருவன்வெலி மகா சேய விஹாரையின் தலைமை பீடாதிபதி நீக்கம் தொடர்பிலும் பொதுவெளியில் ஏற்பட்டுள்ள சர்ச்சசைகள், சலசலப்புகளின் பின்னணியிலேயே கல்லேல்லே சுமனசிறி தேரோவின் பதவி விலகல் அமைந்துள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.