அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

நாட்டிலுள்ள அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், கல்விப் பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கணக்காளர் மற்றும் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் துணைவேந்தர்களும் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழகங்களில் நிலவும் நிர்வாகப் பிரச்சினைகள், கல்வி மற்றும் கல்வி சாரா ஆளணியில் காணப்படும் வெற்றிடம் மற்றும் பற்றாக்குறையை நிரப்புதல், மாணவர்களின் விடுதிப் பிரச்சினைகள், மாணவர் நலன்புரிக் கொடுப்பனவுச் செயன்முறைகளை நெறிப்படுத்தல் உட்பட பல்கலைக்கழகங்களில் காணப்படும் பல்வேறு விடயங்கள் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணும் போதும், புரிந்துணர்வு உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போதும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு முறையான அனுமதி பெறப்படவேண்டியதன் அவசியம் குறித்து கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய துணைவேந்தர்களுக்கு விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!