இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் பேரவைகளில் இப்போதைக்கு மாற்றமெதனையும் செய்யப் போவதில்லை என்று கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டதைப் போல நாடெங்கிலுமுள்ள பல்கலைக்கழகங்களினது பேரவைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது.
இது தொடர்பில் கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் தொடர்பு கொண்டு அறிய முற்றபட்ட போது, அரசாங்கம் மிகவும் தெளிவான பாதையில், நிதானமாகவே முன்னகர்ந்து கொண்டிருக்கிறது. சில விடயங்களில் அவசரப்பட்டு முடிவெடுக்குமளவுக்குப் பாராதூரமாக எதுவும் நடந்து விடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே நேரம், பல்கலைக்கழகங்களின் பேரவைகளது பதவிக்காலம் நிறைவு பெறும் வரை தற்போது பதவியிலுள்ள பேரவைகளைத் தொடர்ந்தும் செயற்படுவதற்கு அனுமதிப்பது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் ஒருவரைக் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நியமித்துள்ளதனால், அவரது வெற்றிடத்துக்குப் புதிய உறுப்பினர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
இதேநேரம், துணைவேந்தர்களின் பதவிக்காலம் நிறைடைந்துள்ள இரு பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொண்டுள்ள கல்வி அமைச்சு, குறிப்பிட்ட இரு பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு வேந்தர் ஒருவரையும் ஜனாதிபதி விரைவில் நியமனம் செய்யவுள்ளார் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
