இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளிலும், பிரிவெனாக்களிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்கென சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலைச் சீருடைத் துணிகள், பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சம்பிரதாய பூர்வ கையளிப்பு நிகழ்வில் வைத்து, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் துணிப் பொதிகளைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில், கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, சீனத் தூதரக அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2025 ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலுமுள்ள அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி கற்கும் 46 இலட்சத்து 40 ஆயிரத்து 86 மாணவர்களின் சீருடைக்குத் தேவையான சுமார் 11 ஆயிரத்து 817 மில்லியன் மீற்றர் துணியை அன்பளிப்பாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் முன்வந்திருந்தது. சீனாவின் முன்மொழிவை ஏற்றுக் கொள்வதற்குக் கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அதன்படி, மூன்று தொகுதிகளாக அனுப்பி வைக்கப்பட்ட சீருடைத் துணிகளின் முதல் இரண்டு தொகுதிகளும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. மூன்றாவது தொகுதி எதிர்வரும் 25 ஆம் திகதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.