தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாக்கள் கசிந்தமை தொடர்பில் பரீட்சைக்குத் தோற்றிய பிள்ளைகளின் பெற்றோர்கள் சிலரும், பிள்ளைகள் சிலரும் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணையின் போதே உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பகுதி ஒன்று வினாத்தாளில் காணப்பட்ட சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னரே தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் ஒருவரால் வெளியிடப்பட்டிருந்தமை குறித்து சர்ச்சை நிலவியது.
இது தொடர்பில் பரீட்சைத் திணைக்களமும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தன. விசாரணைகளின் அடிப்படையில் அலவ்வ பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் உட்பட இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வெளியில் கசிந்த வினாக்களுக்கு அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும், மீள் பரீட்சை நடாத்தப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிலித்திருந்தது.
இந்நிலையில், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.