இலங்கையில் புதியதொரு அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவதற்குச் சிறப்புப் பங்காற்றிய புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இனங்களுக்கிடையில் பிளவில்லாத ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களின் பங்கு பற்றிக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், “இனங்களைப் பிளவுபடுத்தும் அரசியல் கலாசாரம் முடிவுக்கு வந்துள்ளது. வடக்கையும், தெற்கையும் பிரித்தாளும் அரசியல் கலாசாரமே இதுவரை காலமும் இலங்கையில் இருந்தது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்தக் கலாசாரத்தை முடிவுறுத்தியுள்ளது. அனைத்து மக்களின் அபிலாஷைகளையும் வெற்றிகரமாக ஒரு புள்ளியில் கொண்டு வந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
மேலும், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூக ஊடக ஆர்வலர்கள் தேர்தலின் போது ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் ஆதரவைச் சிறப்புக் குறிப்புடன் நினைவு கூர்ந்தார்.