“இலங்கையின் சுதந்திர நாள் – தமிழர்களுக்குக் கரிநாள்” நாளைய நிகழ்வுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புக்கு அழைப்பு!

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுகளுக்குத் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், நாளைய நாளைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும், நாடு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள நேரத்திலும் இரண்டாவது தடவையாகச் சுதந்திர தினம் கொண்டாடப்படத் தேவையில்லை என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் அ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.  அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பொருளாதார பின்னடைவு நேரத்திலும் பெருந் தொகையான பண செலவில் இரண்டாவது தடவையாக சுதந்திர தினத்தைச் செய்ய வேண்டிய தேவை ஏன்? என கேள்வியெழுப்பினார்.

எனவே, நாளைய நாளைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!