புத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டது சனத் நிசாந்தவின் உடல்!

நேற்று விபத்தில் உயிரிழந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிசாந்த பெரேரேவின் பூதவுடல் இன்று புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டஉறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்டோரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கட்டுநாயக்க அதிவேக வீதியில் நேற்று (25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும்  உயிரிழந்தமை  குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சரின் வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில், ராகம வைத்தியசாலகயில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி  இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

சனத் நிஷாந்தவின் பூதவுடல் நேற்று பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று (26) மாலை 4 .30  மணிக்கு புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் இறுதிக் கிரிகைகள் நாளை மறுதினம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆராச்சிக்கட்டுவ ராஜகதளுவ தேவாலய மயானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இறுதி கிரிகை நிகழ்வில் அரச தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!