பயங்கரவாதத் தடைச்சட்ட கைது; 6 வீதமானோர் மீதே வழக்கு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களில் 6 வீத்த்துக்கும் குறைவானோர் மீதே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலின் அடிப்படையில், பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் வழங்கப்பட்ட பதிலில் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகப் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவிடம் கோரப்பட்ட தகவலுக்கு அளிக்கப்பட்ட பதிலில், கடந்த 13ஆண்டுகளில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2 ஆயிரத்து 793 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 184 பேர் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2009 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி தொடக்கம் 2022 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் 2 ஆயிரத்து 793 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 474 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 184 பேர் சந்தேகநபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 10 வழக்குகள் மீளப் பெறப்பட்டுள்ளன என்றும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை – பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்றும் அதனை நீக்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!