ருகுண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன உடனடியாகப் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது விலக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் தரப்பு பணியாளர்களும் நாளை 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இயங்கும் கல்விசார், கல்வி சாராப் பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 17 தொழிற்சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன.
தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட படிப்புறக்கணிப்பு முன்னறிவித்தல் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருடங்களாக பல்கலைக்கழகம் வினைத்திறனற்ற முறையில் நிர்வகிக்கப்பட்டு வந்ததைத் தமது கடித்த்தில் சுட்டிக் காட்டியுள்ள தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் துணைவேந்தர் தானாகப் பதவி விலகிச்செல்ல வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
நாளை முதல் துணைவேந்தர் பதவியை விட்டு விலகும் வரை எவ்விதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.