இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு முன், இராமேஸ்வரம் பகுதியில் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டி இருப்பதனால் உடனடியாகக் கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது என்று கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட காங்கேசன்துறை நவீன பயணிகள் முனையம், இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா இதனை வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர், கப்பல்துறை அமைச்சின் செயலர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், துறைமுகங்கள் அதிகார சபையின் அதிகாரிகள், வட பிராந்திய கடற்படை தளபதி, கடற்படை உயர் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், காங்கேசன்துறைக்கும் இராமேஸ்வரத்துக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. இராமேஸ்வரம் பகுதியில் சில வேலைத் திட்டங்கள் முன்னெடுக்க வேண்டி இருப்பதனால் உடனடியாகக் கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனினும் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களின் தொடர் முயற்சியின் பயனாக விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்க கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்றார்.
இந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இந்த முனையத்தினூடாக வரவேற்கப்பட்டனர். கப்பலில் வந்த இந்தியாச் சுற்றுலா பயணிகளை அமைச்சர் தலைமையிலான குழு வரவேற்றதோடு கப்பலின் கப்டனுக்கு நினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டது.