வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம்: வவுனியாவில் அமைப்பதற்குத் தீர்மானம்!

தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் கீழ் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் ஒன்றை வவுனியாவில் அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் இல்லை. தென்னிலங்கைகே புனர்வாழ்வுக்கு இங்குள்ளவர்கள் அனுப்பப்படுவதால் மொழிப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அவர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு வடக்கில் போதைப் பொருள் புனர்வாழ்வு மையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டதற்கு அமைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான தங்களது பிள்ளைகளை புனர்வாழ்வுக்கு அனுப்ப பெற்றோர் முன்வருகின்றனர். ஆனால் பிள்ளைகளை வடக்குக்கு வெளியில் கொண்டு சென்று புனர்வாழ்வு வழங்குவதற்கு அவர்கள் பின்னடிக்கின்றனர். தென்னிலங்கையில் தமிழ் மொழி உளவள ஆலோசகர்கள் பற்றாக்குறை இருக்கின்றது. பெற்றோரும் நீண்ட தூரம் பயணித்து தமது பிள்ளைகளைப் பார்வையிட வேண்டிவரும் என்பதால் புனர்வாழ்வுக்கு பிள்ளைகளை அனுப்பப் பெற்றோர் தயங்குகின்றனர். எனவே வடக்கு மாகாணத்துக்கு தனியான புனர்வாழ்வு மையம் தேவை என்று அதிகாரிகள் கோரினர்.

வவுனியா பூந்தோட்டத்தில் கூட்டுறவுச் சங்கத்தின் காணி உள்ளது. அங்கு 150 பேருக்கு ஒரே தடவையில் புனர்வாழ்வளிக்க முடியும். தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் கீழேயே இவ்வாறான புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட முடியும் என்றும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதனையே இறுதி முடிவாக ஏற்றுக் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி தேசிய அபாயகர ஒளடதங்கள் அதிகார சபையின் கீழ் புன்வாழ்வுமையத்தை வவுனியாவில் உருவாக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தக் கலந்துரையாடலின் போது உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!