யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் பணிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காகக் கோரப்பட்ட விளம்பரத்தின் அடிப்படையில் விண்ணப்பத்துள்ள அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் படி, யாழ். பல்கலைக்கழகப் பதிவாளருக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் இருவரது விண்ணப்பங்கள் தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் ஒருவர் ஐயவினா எழுப்பியதனால், இருவரது விண்ணப்பங்களையும் ஏற்றுக் கொள்வது தொடர்பில் பல்கலைக்கழகப் பதிவாளரால் மானியங்கள் ஆணைக்குழுவின் தெளிவுபடுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. அதன் படி, இருவரையும் துணைவேந்தர் தெரிவுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான அறிவித்தல் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நான்கு பீடாதிபதிகள், இரண்டு முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் வெளிவாரி விண்ணப்பதாரி ஒருவர் உட்படத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த ஏழு பேருக்குமான நேர்முகத் தேர்வு எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், துணைவேந்தர் தெரிவுக்கான மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் பிரகாரம் பல்கலைக்கழகப் பேரவைச் செயலாளரினால் கடந்த செப்ரெம்பர் மாதம் முதலாம் திகதி துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் கடந்த மாதம் இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், சுற்றறிக்கைக்கு அமைவாகப் புள்ளிகளை வழங்குவதற்கான விசேட பேரவைக் கூட்டத்தை எதிர்வரும் டிசெம்பர் 7ஆம் திகதி நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே விண்ணப்பித்திருந்த பேராசிரியர் ஒருவர் சுற்றறிக்கை நியமங்களைப் பூர்த்தி செய்துள்ளாரா என்பது தொடர்பிலும், வெளியிலிருந்து விண்ணப்பித்த மற்றொருவர் போதிய ஆதாரங்களை இணைக்கத் தவறியமடர்பிலும் எழுந்த ஐயப்பாடுகளை அடுத்து அது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆலோசனை கோரப்பட்டிருந்தது. அதனை ஆராய்ந்த மானியங்கள் ஆணைக்குழு இருவரது விண்ணப்பங்களும் நியமங்களைப் பூர்த்தி செய்துள்ளதாகவும், இருவரையும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்குமாறும் வழிகாட்டுதலை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!