கியூ. ஆர். முறையில் பெற்றோல் விநியோகிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் தளப் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய அதிகார சபை மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 8 வாரங்களுக்கான எரிபொருள் இறக்குமதித் திட்டம், சுத்திகரிப்புச் செயற்பாடுகள் மற்றும் பண்டிகைக் காலத்தில் தடையற்ற எரிபொருள் விநியோகம் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது பேசப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கலந்துரையாடலில், கியூ. ஆர். ஒதுக்கீட்டை மீறித் தொடர்ந்து எரிபொருளை விற்பனை செய்த 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதியை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் தங்கள் எரிபொருள் தாங்கிகளில் குறைந்தபட்சம் ஐம்பது வீதத்துக்கு எரிபொருள் இருப்பைப் பராமரிக்க வேண்டும் என்றும்,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய அதிகார சபை ஆகியவற்றுக்குச் சொந்தமான அனைத்து பவுசர்களுக்கும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி ஏப்ரல் 15-ஆம் திகதிக்குள் நிறைவடைந்ததும், தனியார் பவுசர்களிலும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி செயற் படுத்தப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.