நாட்டில் வழமையான எரிபொருள் விநியோகம் மற்றும் விநியோகத்தை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய ஊழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்காவிட்டால், ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுமுறையில் சென்றவர்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று முதல், இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபன வளாகம், இலங்கை பெற்றோலியம் சேமிப்பு முனைய சேவை வளாகம் என்பன பணிக்குத் திரும்பாத ஊழியர்களுக்குத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து ஊழியர்களும் சேவைக்கு சமூகமளித்து எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மற்றும் ஏனைய சேவைகளை தொடர வேண்டும் எனவும் அந்த விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், அத்தியாவசிய சேவைப் பிரகடனத்துக்கு மறாகப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய ஊழியர்களைப் பணியில் இருந்து இடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சனா விஜெசேகர, பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனைய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.