அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றிறரவு வெளியாகலாம் என அறியவருகிறது.
இதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைக்கு மீண்டும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்களை இன்று முதல் ஒவ்வொரு மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்களும் அரசாங்க அச்சகத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் நேற்று இரவு திடீரென அது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்படாமையே இதற்குக் காரணம் என தெரியவருகின்றது. தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதற்குரிய வாக்குச்சீட்டுக்களை அரசாங்க அச்சகத் திணைக்களத்தில் இன்று முதல் ஒவ்வொரு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களும் பெற்றுச் செல்வதற்கும் நாளை 15 ஆம் திகதி முதல் தபால் மூல வாக்களிப்புக்குரிய ஒழுங்குகளை முன்னெடுக்கும் வகையிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும், நேற்றிரவு திடீரென அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அவசரமாகக் கூடியதன் பின்னர் தபால் மூல வாக்கெடுப்பு கால வரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.