யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் எனக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியை மீளப்பெற வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை சுழிபுரம் சந்தியில் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், “தமிழர் தேசம் மீதான திட்டமிட்ட பௌத்த மயமாக்கலை நிறுத்து”, தமிழ் எம். பி களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் நிலை என்ன?”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “பறாளை முருகன் எங்கள் சொத்து” போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் மத குருமார்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சைவ, சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்படப் கலந்துகொண்டிருந்தனர்.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்தை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டுச் சென்றனர்.