தாடி வளர்த்ததனால் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கும், இறுதிப் பரீட்சைக்கும் அனுமதிக்கப்படாத மாணவன் ஒருவனை உடனடியாகப் பரீட்சைக்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுகநல பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் தாதிய மாணவரான அப்துல் ரஹீம் மொஹமட் நவ்ஷாத் என்பவர் தாடி வளர்த்ததன் காரணமாக விரிவுரைகளுக்கு அனுமதிக்கப்படாமல், அதனால் போதிய வரவின்மையை கொண்டிருக்கவில்லை என இறுதிப் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படவில்லை.
இதனால் அந்தத் தீர்மானத்துக்கு எதிராக அந்த மாணவன் இடைக்கால உத்தரவு கோரித் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான விசாரணையின் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் மாணவர்களின் நடை, உடை, ஒழுக்கம் தொடர்பில் பல்கலைக் கழகத்தின் நடைமுறைகளை எதிர்வரும் செப்ரெம்பர் 14 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பல்கலைக் கழகத் துணைவேந்தர், சுகநல பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி உள்ளிட்ட பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வழக்கின் விசாரணை நேற்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது மனுதாரரான மாணவன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், குறித்த மாணவன் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர் எனவும், மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடி வளர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தாடி வளர்த்ததன் காரணமாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் குறித்த மாணவனை விரிவுரைகளில் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், மாணவன் வருகைக்கான ஆகக் குறைந்த தேவைப்பாட்டைப் பூர்த்தி செய்யாத காரணத்தினால் ஆண்டிறுதி பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதியையும் பல்கலைக்கழக நிர்வாகம் மறுத்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் ஆடை மற்றும் நடத்தைக் கட்டுப்பாடுகள் தொடர்பான விதிமுறைகளைக் கடந்த வருடம் மார்ச் மாதம் அமுல்படுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திடீரென தீர்மானித்ததாக தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே மனுதாரரான மாணவன் தாடி வளர்த்து வந்ததாகத் தெரிவித்தார்.
மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மாணவர்கள் செயற்படுவதைத் தடுக்கும் விதிமுறைகளை விதிப்பது நியாயமற்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வலியுறுத்தினார்.
மனுதாரர் சார்பிலான வாதங்களைப் பரிசீலித்த நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, பல்கலைக் கழகம் திடீரென இவ்வாறான விதிமுறைகளை விதித்ததன் மூலம் மாணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுவதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தாடி வைத்திருந்ததாகக் கூறி விரிவுரைகள் மற்றும் பரீட்சைகளுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்ட மாணவனை உடனடியாகப் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்ததுடன், இது தொடர்பில் பல்கலைக் கழக மாணவர்களின் நடை, உடை, ஒழுக்கம் தொடர்பில் பல்கலைக் கழகத்தின் நடைமுறைகளை செப்ரெம்பர் 14 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.