இலங்கை வாழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோளை முன்வைத்துள்ளது.
அரசியலமைப்புக்கு முரணான வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி, இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் கடிதமொன்றைக் கையளித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் 2023 மார்ச் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட்டு, புதிய உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், வேட்பாளர்கள் தேர்தல் பிரசார தடவடிக்கைகளில் இறங்கியிருப்பதுடன், எதிர்வரும் தேர்தலில் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு இலங்கை மக்கள் மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஒத்திவைப்புக் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலும், அரசியலமைப்பின் ஏற்பாடுகளை அப்பட்டமாக மீறும் வகையிலும் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது எனவும், இலங்கை வாழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
