யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக, வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாகச் செயற்படும் வகையில், அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டம் மற்றும் அதன் பின்னரான திருத்தச் சட்டங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு உண்டான நிறைவேற்றுத் தத்துவத்தின் அடிப்படையில் வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி. பத்மநாதனின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் புதிய வேந்தராக வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல்
கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழ்நாள் பேராசிரியர் இ. குமாரவடிவேல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் மிக மூத்த கல்வியியலாளராவார். பௌதிகவியல் துறையில் பேராசிரியராக விளங்கிய இவர், விஞ்ஞான பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும் பதவி வகித்தவர். இவரது தகைசார் பங்களிப்பின் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
