வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சட்டவிரோத கைது மற்றும் துன்புறுத்தல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதோடு இழப்பீடு பெற்றுத் தருமாறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றையதினம்(02) இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இடம்பெற்ற சட்டவிரோதமான கைது மற்றும் துன்புறுத்தல்கள் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை நான் பாராளுமன்ற உறுப்பினர் என்று தெரிந்துகொண்டு வேண்டுமென்று உயிராபத்தை ஏற்படுத்தும் வகையில் மற்றும் என்னை அச்சுறுத்தி அரசியல் செயற்பாடுகளில் இருந்து என்னை ஓரங்கட்டும் நோக்கில் நன்கு திட்டமிட்ட வகையில் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வெடுக்குநாறிமலையில் பொலிஸார் இனவாதமாகவே செயற்பட்டனர். மதவாதத்தின் அடிப்படையில் செயற்பட்டார்கள். இவ்வாறாக பொலிஸாரின் செயற்பாடுகளால் மன உளைச்சலுக்கு நான் உள்ளாக்கப்பட்டேன்.
அத்துடன் வெடுக்குநாறிமலையில் ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.
சுதந்திரமாக அரசியலில் ஈடுபட முடியாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் என்னுடன் பணியாற்றினால் பொலிஸாரினால் பழிவாங்கப்படுவோம் அவமானப்படுத்தப்படுவோம் என்கின்ற அச்சம் பாராளுமன்ற உறுப்பினராகிய என்னுடன் பணியாற்றும் உத்தியோகபூர்வ பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் எனது கடமைகளை ஆற்றமுடியாதுள்ளது. இதன் மூலம் எனது கௌரவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு எனக்கும் எனது செயலாளருக்கும் ஏற்பட்ட அபகீர்த்திக்கு இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.