யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணத்தில் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்ததன் மூலமும், ஜனாதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனது பெயரைப் பொறிக்காமல், “பொது மக்களின் நிதியைப் பயன்படுத்தி….. ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட…” என்ற நினைவுக்கற்களை திரை நீக்கம் செய்யப்பட்டதன் மூலமும் “மக்களின் ஜனாதிபதி” என்ற பாராட்டைப் பெற்றுள்ளார்.


யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத் தொடக்க நிகழ்வில் இன்று காலை கலந்து கொண்டார். இத்துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கும், கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலிருந்து வரும் மீன்பிடி படகுகளுக்கும் நீர், மின்சாரம், எரிபொருள், போன்ற வசதிகள் குளிரூட்டும் வசதிகள், வலை தயாரிக்கும் வசதிகள், ஏல விற்பனை மண்டப வசதிகள் மற்றும் தகவல் பரிமாற்ற மத்திய நிலைய வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனதிபதி, “மீனவ சமூகத்தினருக்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் இன்னும் பல மீன்பிடி துறைமுகங்கள் எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும், மீனவ சமூகத்தினருக்கு வலை உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.


அதன்பின்னர், யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இதன் போது,மூன்று பேருக்கு ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக கடவுச்சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஒருவருடைய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், மருத்துவர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, மற்றும் ஆறுமுகம் ஜெகதீஸ்வரன், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சுமிந்த பத்திராஜ, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்குச் சென்ற ஜனாதிபதி பொதுநூலகத்தை டிஜிற்றல் மயப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வின் போது யாழ். மாவட்ட நாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதம நூலகர் மற்றும் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணம், மண்டைதீவுப் பகுதியில் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்த ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளையும், பொது மக்கள் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.
இன்று மாலை, கச்சதீவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
