ஜனாதிபதியைத் தேடித் திரிந்த புலனாய்வாளர்கள்!

ஜனாதிபதியின் இன்றைய யழ்ப்பாண விஜயத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காத்திருந்த போதிலும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டு நள்ளரவிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்து, தனிப்பட்ட இடமொன்றில் சென்று தங்கிவிட்டு, மயிலிட்டிப் பகுதியில் நடந்த நிகழ்வுக்கு நேரடியாக ஜனாதிபதி வந்திறங்கியதாகச் சொல்லப்படுகிறது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுராகுமார திசாநாயகாவைக் காணாமல், அவரைத்தேடி, தலையைப் பிய்த்துக் கொண்டு திரிந்துள்ளனர் புலனாய்வாளர்கள். இந்தச் சுவாரசியமான சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் குறித்து ஊடகங்கள் வாயிலாகத் தகவல்கள் வெளியாகிய போதிலும், ஆரம்பத்திலிருந்து ஜனாதிபதியின் விஜயம் குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் நெருங்கிய வட்டாரங்களில் மிகவும் இரகசியமாகவே பேணப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், ஏற்பாட்டாளர்களுக்குக் கூட ஜனாதிபதியின் வருகை ஏற்பாடுகள் குறித்த எந்தத் தகவலும் பகிரப்படவில்லை. ஜனாதிபதி பங்கு கொள்ளும் பொது நிகழ்வுகள் பற்றி அந்தந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த கருத்துகள் மட்டுமே பொது வெளியில் பகிரப்பட்டன.

ஜனாதிபதி எப்பொழுது வருவார்? எங்கு தங்குகிறார்? நிகழ்வுகளுக்கான அவரது வாகத் தொடரணி ஒழுங்குகள் என்ன என்பது பற்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் எவையும் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை ஜனாதிபதிக்கான பாதுகாப்பு குறித்த ஏற்பாடுகளுடன் பாதுகாப்புத் தரப்பினர் காத்திருந்த போதிலும், அதிகாரிகளுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து விட்டுத் தன்னுடைய ஆதரவாளர் ஒருவருடைய வீட்டில் சென்று தங்கிவிட்டு, மயிலிட்டிப் பகுதியில் நடந்த நிகழ்வுக்கு நேரடியாக ஜனாதிபதி வந்திறங்கியதாகச் சொல்லப்படுகிறது.

ஜனாதிபதிக்கும், அரச புலனாய்வு ஏஜென்சிகளுக்குமிடையில் ஒரு இடைவெளி காணப்படுவதாகவும், ஜனாதிபதி தனக்கு மிகவும் நெருக்கமான தனது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஒருசிலருடனேயே முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் அரசல், புரசலாகச் செய்திகள் வந்திருந்த நிலையில், ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் அதனை உறுதிப்படுத்துகிறது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஊழல்வாதிகள் மற்றும் பாதாள உலக்க்குழுக்களின் கைது நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குக் காரணமாக இருக்கலாம் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!